Questions? +1 (202) 335-3939 Login
Trusted News Since 1995
A service for global professionals · Tuesday, March 19, 2024 · 697,021,090 Articles · 3+ Million Readers

ஈழத்தமிழ் மக்களின் பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் - சுதன்ராஜ்

'ஈழத்தமிழ் மக்களின் அரசியற் தீர்வுக்கான பொதுவாக்கெடுப்பு'!

PARIS, FRANCE, May 17, 2018 /EINPresswire.com/ --

இது, இன்றோ நாளையோ நடக்கப் போகிற காரியமல்லத்தான். ஆனால் இதுதான் அரசியற் தீர்வுக்கான ஒரு சிறந்த பொறிமுறை என்ற வகையில், பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் முதல் மக்கள் அரங்கம் (ஏப்ரல் 15 ஞாயிறு) கனேடிய மண்ணில் இடம்பெற்றிருந்தது.

ஈழத்தமிழர்களுக்கான அரசியற் தீர்வு விவகாரத்தில் பொதுவாக்கெடுப்பு ஒன்று அனைத்துலக சமூகத்தின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கை புலம்பெயர் தமிழர் அமைப்புக்களிடத்தில் மட்டுமல்ல, தமிழக அமைப்புக்களிடத்திலும் கட்சிகளிடத்திலும் காணப்படுகின்றது.

மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களது தலைமையில், தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றபபட்ட தீர்மானம் ஒன்றில் இதுவும் ஒரு முன்மொழிவாக முன்வைக்கப்பட்டிருந்தது.

பல்வேறு தளங்களிலும் இவ்வாறு காணப்பட்டிருந்த இக்கோரிக்கையினை செயற்பூர்வமாக உருப்பெறுவதற்குரிய மூலோபாயங்களின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தினை தோற்றுவித்திருந்தது.

பொது அமைப்பாக உருவாகியுள்ள இந்த மக்கள் இயக்கம், உலகளாவியரீதியில் இந்நிலைப்பாட்டில் உள்ள அமைப்புக்களை மையப்படுத்தும் முனைப்பிலும் ஈடுபட்டுள்ளது.

இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக இனப்பிரச்சனைக்கான தீர்வினை எட்ட முடியும் என்ற நம்பிக்கையுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமல்ல மேற்குலக சமூகமும் இருக்கின்ற நிலையில், பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம் அவசியம்தானா என்ற கேள்வி எழலாம்.

பதில், அவசியம் என்றே இருக்கின்றது.

தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை என்ற ஈழத்தமிழ் மக்களின் அரசியல் பெருவிருப்பினை நீர்த்துப் போகச் செய்து, சிங்கள பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாக கொண்ட 'சிறிலங்கா' என்ற அரசியலமைப்பின் ஒற்றையாட்சிக்குள், தமிழர்களை நிரந்தமாகவே அடிமையாக வைத்திருக்கின்ற ஏற்பாடாகவே இந்த சீர்திருத்தத்தினை பலரும் காண்கின்றனர்.

அதுமட்டுமல்ல, இலங்கையின் இறுதியுத்தில் தமிழ்மக்கள் மீது ஒரு பாரிய மனித உரிமைமீறல் ஒன்று நடைபெற்றுள்ளதனையோ, அதற்குரிய பாரிகார நீதிக்கான ஏற்பாடோ இந்த அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் காணப்படவில்லை.

இந்நிலையில், ஈழத்தமிழ் மக்களின் அரசியற்தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றினைக் கோரும், பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கின் தோற்றம் சமகாலத்தில் அவசியமான ஒன்றாகவே இருக்கின்றது.

இப்பொதுவாக்கெடுப்பு, இலங்கைத்தீவில் தமிழர் தாயகப்பகுதியில் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழர்களிடத்திலும் நடத்தப்பட வேண்டும் என்பது இதன் அடிப்படை விடயங்களில் ஒன்றாக காணப்படுகின்றது.

தற்போது, இந்த மக்கள் இயக்கத்தின் முதல் மக்கள் அரங்கம் கனேடிய மண்ணில் மூன்று விடயங்களை மையமாக கொண்டு கூடியிருந்தது.

உலகளாவியரீதியில் இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கு, பொதுவாக்கெடுப்பினை வலியுறுத்துவது மட்டுமல்ல, அச்செயற்பாட்டிலும் ஈடுபட்டிருந்த சர்வதேச அறிவாளர்கள் பலர் அழைக்கப்பட்டுள்ளனர்.

தென்சூடான், குர்திஸ்தான், கத்தலோனியா போன்ற் பிராந்தியங்களின் நடைபெற்றிருந்த பொதுவாக்கெடுப்பின் அனுபவங்கள் ஆய்வு செய்யப்பட இருப்பதோடு, ஈழத்தமிழர்களுக்கான பொதுவாக்கெடுப்புக்குரிய செயல்வழிப்பாதை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது.

'ஈழத் தமிழர் தேசம் தனது அரசியல் நிகழ்ச்சிநிரலை தானே தீர்மானிக்கும் வகையில் வியூகம் அமைத்து செயற்படுதல் அவசியமானதாகும். சிறிலங்கா ஆட்சியாளர்களதும், அனைத்துலக அரசுகளதும் நிகழ்ச்சி நிரலுக்கு உட்பட்டு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, எமக்கான அரசியல் அரங்கை நாம் எவ்வாறு அமைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து நாம் ஆழமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டியதொரு காலகட்டத்தில் இருக்கிறோம்' என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூற்று இவ்விடயத்தில் முக்கியமானதாக உள்ளது.

'தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கான எந்தவொரு அரசியற்தீர்வும் தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படுதல் முக்கியமானது. இது ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டின்பாற்பட்ட அடிப்படையான உரிமையாகும். ஈழத்தமிழ் மக்களது தேசிய இனப்பிரச்சினைக்கான எத்தகைய தீர்வும் இனப்படுகொலையிலிருந்த தமிழர் தேசத்தைப் பாதுகாக்கக்கூடியவகையில், தமிழ் மக்களுக்கான பரிகாரநீதியின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தமிழீழ மக்களுக்கு பரிடகாரநீதி அடிப்படையிலான அரசியற்தீர்வு அவசியம் என்பதனை வலியுறுத்துகிறது' எனவும் வி.உருத்திரகுமாரன் தனது புத்ததாண்டுச் செய்தியில் குறிப்பிடுகின்றார்.

இத்தகைய ஒரு கருத்தியல் புறச்சூழலில்தான், பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் மக்கள் அரங்கம் கனேடிய மண்ணில் இடம்பெற்றுள்ளது.

பொதுவாக்கெடுப்புக்கும், கனேடிய மண்ணுக்கு நிறையவே தொடர்புகள் உண்டு.

அகண்ட கனடாவின் ஒரு பிராந்தியமாக கியுபெக் இருக்கின்றது. இது பிரென்சு மொழி பேசுகின்ற ஒரு பகுதி.

மொழிரீதியாக தங்களை ஒரு தனித்துவமான இனமென அடையாளப்படுத்தும் கியுபெக்கியர்களிடத்தில், பொதுவாக்கெடுப்பு கோரும் மக்கள் இயக்கங்களும் கட்சிகளும் காணப்படுகின்றன.

கனேடிய அரசியலமைப்புக்கு உட்பட்டதாக, கியுபெக்கிற்கு உள்ள பிராந்திய ஆட்சிமன்றத்தில் ஆட்சிக்கதிரைக்கும் வரும் கியுபேக்கிய தேசியவாத கட்சிகள், கனடாவில் இருந்து பிரிந்து செல்வதற்குரிய பொதுவாக்கெடுப்பினை 1980,1995களில் நடத்தியிருக்கின்றன.

ஆனால் அவைகள் சொற்ப வாக்குகளில் தோல்வியிற்றிருந்தாலும், அக்கோரிக்கை இற்றைவரை கியுபெக்கில் உயிர்ப்புடன் காணப்படுகின்றது.

இவ்விடத்தில் ஒன்றுபட்ட கனடாவில் இருந்து பிரிந்து செல்வதற்குரிய ஜனநாயக அரசியல் உரிமையினை கனேடிய அரசு வழங்கியிருந்தது மட்டுமல்லாது, அதன் அரசியல் ஏற்பாடும் அதற்குரிய அரசியல் வெளியை வழங்கியுள்ளது.

மறுவளமாக இலங்கையின் அரசியலமைப்பினை நோக்கினால், அதன் ஆறாம் திருத்தச்சட்டம், மக்கள் தமது சுயநிர்ணய உரிமையினை வெளிப்படுத்துவதனை முற்றாக நிராகரிப்பதோடு, அதனை குற்றமாக கூறுகின்றது. இந்த ஏற்பாடே தற்போதைய அரசியலமைப்பு சீர்திருத்தத்திலும் காணப்படுகின்றது.

இது மக்களின் அடிப்படை கருத்துரையினை மறுதலிக்கின்ற பாராதூரமான விடயம் மட்டுமல்லாது, அடிப்படை மனித உரிமை மீறலும் ஆகும்.

இவ்விடத்தில், மக்கள் சுதந்திரமாக தமது அரசியல் விருப்பினை வெளிப்படுத்தவதனை தடுக்கின்ற ஆறாம் திருத்தச்சட்டத்துக்கு எதிராக போராட்டத்தினை நடத்துவதே, தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற தமிழ் அரசியல் தரப்பின் அரசியற் செயற்பாடாக இருக்க முடியும்.

ஆறாம் திருத்தச்சட்டம் நீக்கப்படாத வரை இலங்கையின் ஏந்தவொரு அரசியல் ஏற்பாட்டுக்குள்ளும் தமிழர்கள் தமது அரசியல் விருப்பினை வெளிப்படுத்துவதற்குரிய அரசியல் வெளி காணப்படாது என்பதுதான் இக்கட்டுரையாளரின் பார்வையாக உள்ளது.

இச்சூழலில்தான், இலங்கைத்தீவுக்கு வெளியே அனைத்துலக அரசங்கில் தமக்கு கிடைத்துள்ள ஜனநாயக வெளியில், தமக்கான அரசியல் தீர்வுக்கு பொதுவாக்கெடுப்பினை வென்றடைவதற்கான முதல் அரங்கினை கனேடிய மண்ணில் ஈழத்தமிழர்கள் கண்டுள்ளனர்.

சுதன்ராஜ்
நாதம் ஊடகசேவை
+33755168341
email us here

Powered by EIN Presswire


EIN Presswire does not exercise editorial control over third-party content provided, uploaded, published, or distributed by users of EIN Presswire. We are a distributor, not a publisher, of 3rd party content. Such content may contain the views, opinions, statements, offers, and other material of the respective users, suppliers, participants, or authors.

Submit your press release